யோவானின் முதலாம் கடிதம் 2:1-29

2  சின்னப் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும், நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான+ இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக* இருப்பார்.+  நம்முடைய பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலி*+ அவர்தான்; நம்முடைய பாவங்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்தின் பாவங்களுக்கும் பிராயச்சித்த பலி அவர்தான்.+  அவருடைய கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், அவரை அறிந்திருக்கிறோம் என்று நாம் சொல்ல முடியும்.  “அவரை அறிந்திருக்கிறேன்” என்று ஒருவன் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் பொய்யன்; அவனுக்குள் சத்தியம் இல்லை.  ஆனால், ஒருவன் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தால் அவன் உண்மையில் கடவுளுடைய அன்பை முழுமையாகக் காட்டுகிறான்.+ நாம் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இதனால் தெரிந்துகொள்கிறோம்.+  ‘நான் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறேன்’ என்று சொல்கிற ஒருவன், அவர் நடந்தபடியே தானும் தொடர்ந்து நடக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.+  அன்புக் கண்மணிகளே, நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளை அல்ல, ஆரம்பத்திலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பழைய கட்டளைதான்,+ நீங்கள் கேட்ட செய்திதான்.  இருந்தாலும், ஒரு புதிய கட்டளையை நான் உங்களுக்கு எழுதுகிறேன். அவர் கடைப்பிடித்த கட்டளை அது; நீங்களும் அதைக் கடைப்பிடித்தீர்கள். ஏனென்றால், இருள் விலகிக்கொண்டிருக்கிறது, சத்திய ஒளி ஏற்கெனவே பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.+  ஒளியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தன் சகோதரனை வெறுக்கிறவன்+ இன்னும் இருளிலேயே இருக்கிறான்.+ 10  தன் சகோதரன்மேல் அன்பு காட்டுகிறவன் ஒளியில் நிலைத்திருக்கிறான்;+ எதுவுமே அவனைத் தடுக்கி விழ வைக்காது. 11  ஆனால், தன் சகோதரனை வெறுக்கிறவன் இருளில் இருக்கிறான், இருளில் நடக்கிறான்;+ இருள் அவனுடைய கண்களைக் குருடாக்கியிருப்பதால் அவன் எங்கே போகிறான் என்பதே அவனுக்குத் தெரிவதில்லை.+ 12  சின்னப் பிள்ளைகளே, அவருடைய பெயருக்காக உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால்+ நான் உங்களுக்கு எழுதுகிறேன். 13  அப்பாக்களே, ஆரம்பத்திலிருந்து இருக்கிறவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, பொல்லாதவனை நீங்கள் ஜெயித்திருப்பதால்+ நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளம் பிள்ளைகளே, பரலோகத் தகப்பனை நீங்கள் அறிந்திருப்பதால்+ நான் உங்களுக்கு எழுதுகிறேன். 14  அப்பாக்களே, ஆரம்பத்திலிருந்து இருக்கிறவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, நீங்கள் பலமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்,+ கடவுளுடைய வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது,+ பொல்லாதவனை நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள்;+ அதனால் உங்களுக்கு எழுதுகிறேன். 15  இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்தில் இருக்கிற காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்.+ ஒருவன் இந்த உலகத்தின் மீது அன்பு வைத்தால், பரலோகத் தகப்பன்மீது அவனுக்கு அன்பு இல்லை.+ 16  ஏனென்றால், உலகத்தில் இருக்கிற எல்லாமே, அதாவது உடலின் ஆசையும்+ கண்களின் ஆசையும்+ பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணமும்,* பரலோகத் தகப்பனிடமிருந்து வருவதில்லை, இந்த உலகத்திடமிருந்துதான் வருகின்றன. 17  அதோடு, இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும்;+ கடவுளுடைய விருப்பத்தை* செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.+ 18  இளம் பிள்ளைகளே, இது கடைசிக் காலம். அந்திக்கிறிஸ்து வருவதாக+ நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.+ இது கடைசிக் காலம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். 19  அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஏனென்றால் அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.+ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மிடமே இருந்திருப்பார்கள். எல்லாரும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெட்டவெளிச்சமாவதற்குத்தான் அப்படி நடந்திருக்கிறது.+ 20  பரிசுத்தமானவரால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.*+ உங்கள் எல்லாருக்கும் சத்தியம் தெரியும். 21  உங்களுக்குச் சத்தியம்+ தெரியாது என்பதால் அல்ல, அது உங்களுக்குத் தெரியும் என்பதாலும், எந்தப் பொய்யும் சத்தியத்திலிருந்து வராது+ என்பதாலும்தான் உங்களுக்கு எழுதுகிறேன். 22  இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்?+ தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து.+ 23  மகனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களைத் தகப்பன் ஏற்றுக்கொள்ள மாட்டார்.+ ஆனால், மகனை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறவனைத்+ தகப்பன் ஏற்றுக்கொள்வார்.+ 24  அதனால், ஆரம்பத்திலிருந்து கேட்ட விஷயங்கள் உங்களுக்குள் நிலைத்திருக்க வேண்டும்.+ ஆரம்பத்திலிருந்து கேட்ட விஷயங்கள் உங்களுக்குள் நிலைத்திருந்தால், மகனோடும் ஒன்றுபட்டிருப்பீர்கள், தகப்பனோடும் ஒன்றுபட்டிருப்பீர்கள். 25  அதோடு, அவர் நமக்கு முடிவில்லாத வாழ்வை+ வாக்குக் கொடுத்திருக்கிறார். 26  உங்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்களை உங்களுக்கு எழுதுகிறேன். 27  அவர் தன்னுடைய சக்தியால் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்;+ அந்தச் சக்தி உங்களில் நிலைத்திருக்கிறது. அதனால், யாருமே உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரிடமிருந்து வருகிற அந்தச் சக்தி உண்மையானது, பொய் அல்ல. அது உங்களுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் கற்றுக்கொடுக்கிறது.+ அதனால், கற்றுக்கொண்டபடியே அவரோடு ஒன்றுபட்டிருங்கள்.+ 28  சின்னப் பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது தயக்கமில்லாமல் பேசுகிறவர்களாக+ இருப்பதற்காகவும், அவருடைய பிரசன்னத்தின்போது அவமானத்தில் விலகிப்போய்விடாமல் இருப்பதற்காகவும் அவரோடு ஒன்றுபட்டிருங்கள். 29  அவர் நீதியுள்ளவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீதியைக் கடைப்பிடிக்கிற எல்லாரும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள்+ என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வழக்கறிஞராக.”
வே.வா., “பாவப் பரிகார பலி; சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகிறது.”
வே.வா., “தன்னிடம் இருப்பதைப் பற்றிப் பெருமையடிக்கிற குணமும்.”
வே.வா., “சித்தத்தை.”
வே.வா., “அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறீர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா