1 ராஜாக்கள் 3:1-28
3 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடன் சாலொமோன் சம்பந்தம் பண்ணினார்; அவனுடைய மகளைக் கல்யாணம் செய்து,+ ‘தாவீதின் நகரத்துக்கு’+ கூட்டிக்கொண்டு வந்தார். அரண்மனையையும்+ யெகோவாவின் ஆலயத்தையும்+ எருசலேம் நகரத்தின் மதிலையும் கட்டி முடிக்கும்வரை+ அவளை அங்கேயே தங்க வைத்தார்.
2 அந்தச் சமயத்தில் யெகோவாவின் பெயருக்காக ஓர் ஆலயம் கட்டப்படவில்லை.+ அதனால், மக்கள் இன்னமும் ஆராதனை மேடுகளில்தான் பலி கொடுத்து வந்தார்கள்.+
3 சாலொமோன் தன்னுடைய அப்பா தாவீது சொல்லிக்கொடுத்தபடியே யெகோவாவின் சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து, கடவுள்மீது தொடர்ந்து அன்பு காட்டிவந்தார். ஆனால், இன்னமும் ஆராதனை மேடுகளில்தான் பலிகளை எரித்து, அவற்றின் புகையை எழும்பிவரச் செய்தார்.+
4 மிக முக்கியமான ஆராதனை மேடு கிபியோனில் இருந்ததால்,+ பலி கொடுப்பதற்காக ஒருநாள் ராஜா அங்கே போனார். அங்கிருந்த பலிபீடத்தில் 1,000 தகன பலிகளைக் கொடுத்தார்.+
5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது ராத்திரியில் அவருடைய கனவில் யெகோவா தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்”+ என்றார்.
6 அதற்கு சாலொமோன், “உங்கள் ஊழியரான என் அப்பா தாவீது உங்கள் முன்னால் உண்மையோடும் நீதியோடும் நேர்மையான உள்ளத்தோடும் நடந்துகொண்டார். அதனால், அவர்மீது அளவுகடந்த அன்பை* காட்டியிருக்கிறீர்கள். அவருடைய சிம்மாசனத்தில் உட்கார ஒரு வாரிசைத் தந்து இன்று வரைக்கும் அதே அன்பைக் காட்டி வந்திருக்கிறீர்கள்.+
7 யெகோவா தேவனே, உங்கள் ஊழியனாகிய நான் சின்னப் பையன், அனுபவம் இல்லாதவன்.+ ஆனாலும், என் அப்பா தாவீதின் சிம்மாசனத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.
8 நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த மக்கள்+ எண்ண முடியாத அளவுக்கு ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை ஆட்சி செய்ய அடியேனை நியமித்திருக்கிறீர்கள்.
9 அதனால், உங்களுடைய மக்களுக்கு நீதி வழங்குவதற்கும், நல்லது கெட்டதைப் பகுத்தறிந்து பார்ப்பதற்கும்+ உங்களுக்குக் கீழ்ப்படிகிற இதயத்தை அடியேனுக்குக் கொடுங்கள்.+ இல்லாவிட்டால், இந்தத் திரளான* மக்களுக்கு என்னால் எப்படி நீதி வழங்க முடியும்?” என்றார்.
10 சாலொமோன் சொன்னதைக் கேட்டு யெகோவா மிகவும் சந்தோஷப்பட்டார்.+
11 அதனால் அவரிடம், “நீண்ட ஆயுசையோ செல்வத்தையோ எதிரிகளின் உயிரையோ நீ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, நீதி வழங்குவதற்குத் தேவையான ஞானத்தைக் கேட்டிருக்கிறாய்.+
12 அதனால், நீ கேட்டபடியே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை உனக்குத் தருவேன்.+ உன்னைப் போல் ஞானமுள்ளவர் உனக்கு முன்பும் இருந்ததில்லை, உனக்குப் பின்பும் இருக்கப்போவதில்லை.+
13 அதோடு, நீ கேட்காத செல்வத்தையும் புகழையும்கூட+ உனக்குத் தருவேன்.+ உன் காலத்தில் வேறெந்த ராஜாவும் உனக்குச் சமமாக இருக்க மாட்டார்.+
14 உன் அப்பா தாவீதைப் போல்+ நீயும் என்னுடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து என்னுடைய வழியில் நடந்தால், நீண்ட ஆயுசையும்கூட உனக்குத் தருவேன்”+ என்று சொன்னார்.
15 சாலொமோன் தூங்கி எழுந்தபோது கனவில்தான் கடவுள் தன்னிடம் பேசினார் என்பதைத் தெரிந்துகொண்டார். பின்பு, அவர் எருசலேமுக்குப் போய் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் நின்றார். அங்கே தகன பலிகளையும் சமாதான பலிகளையும்+ கொடுத்தார். அதோடு, தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தார்.
16 ஒருநாள், இரண்டு விபச்சாரிகள் ராஜா முன்னால் வந்து நின்றார்கள்.
17 முதல் பெண் அவரிடம், “எஜமானே, நானும் இந்தப் பெண்ணும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். இவள் என்னோடு வீட்டில் இருந்தபோது எனக்குக் குழந்தை பிறந்தது.
18 மூன்று நாள் கழித்து இவளுக்கும் குழந்தை பிறந்தது. வீட்டில் நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இருந்தோம். வேறு யாருமே இல்லை.
19 ராத்திரி தூங்கும்போது இவள் தன்னுடைய குழந்தைமேல் புரண்டு படுத்துவிட்டாள், அதனால் இவளுடைய மகன் செத்துவிட்டான்.
20 உங்கள் அடிமைப் பெண்ணாகிய நான் அசந்து தூங்கிக்கொண்டிருந்தபோது, இவள் நடுராத்திரியில் எழுந்து என் பக்கத்தில் இருந்த குழந்தையைத் தூக்கி தன் பக்கத்தில் வைத்துக்கொண்டாள். இறந்துபோன குழந்தையை என் பக்கத்தில் வைத்துவிட்டாள்.
21 குழந்தைக்குப் பால் கொடுக்க காலையில் எழுந்து பார்த்தபோதுதான் அது செத்துக்கிடந்தது எனக்குத் தெரிந்தது. அந்தக் குழந்தையை நன்றாகப் பார்த்தபோது அது நான் பெற்ற குழந்தை இல்லையென்று தெரிந்துகொண்டேன்” என்று சொன்னாள்.
22 அதற்கு இன்னொரு பெண், “இல்லை, உயிரோடு இருப்பது என் குழந்தை, செத்துப்போனதுதான் உன் குழந்தை” என்று சொன்னாள். ஆனால் முதல் பெண், “இல்லை, செத்துப்போனது உன் குழந்தை, உயிரோடு இருப்பதுதான் என் குழந்தை” என்று சொன்னாள். இப்படி, ராஜாவின் முன்னால் அவர்கள் வாக்குவாதம் பண்ணினார்கள்.
23 அப்போது ராஜா, “‘உயிரோடு இருப்பது என் குழந்தை, செத்துப்போனது உன் குழந்தை’ என்று இவள் சொல்கிறாள். அவளோ, ‘இல்லை, செத்துப்போனது உன் குழந்தை, உயிரோடு இருப்பதுதான் என் குழந்தை’ என்று சொல்கிறாள்” என்றார்.
24 பின்பு, “வாளைக் கொண்டுவாருங்கள்” என்று கட்டளையிட்டார். ஒரு வாளை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள்.
25 அப்போது அவர், “உயிரோடு இருக்கிற குழந்தையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை இவளுக்கும் இன்னொரு பாதியை அவளுக்கும் கொடுங்கள்” என்று சொன்னார்.
26 உடனே உயிரோடு இருக்கிற குழந்தையின் அம்மா பதறினாள். பெற்ற மனம் அந்தக் குழந்தைக்காகத் துடித்தது.* அதனால் அவள், “எஜமானே, உயிரோடு இருக்கிற குழந்தையை அவளுக்கே கொடுத்துவிடுங்கள், தயவுசெய்து குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள்!” என்று கெஞ்சினாள். ஆனால் மற்ற பெண்ணோ, “உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். குழந்தையை வெட்டிப்போடுங்கள்” என்று சொன்னாள்.
27 அப்போது ராஜா, “குழந்தையைக் கொல்லாதீர்கள். அந்த முதல் பெண்தான் அவனுடைய அம்மா, அவளிடமே அவனைக் கொடுங்கள்” என்று சொன்னார்.
28 ராஜா சொன்ன தீர்ப்பை இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள். கடவுள் கொடுத்த ஞானத்தால்தான் அவர் நியாயம் வழங்குகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.+ அதனால், ராஜாவைப் பார்த்து பிரமித்துப்போனார்கள்.*+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “மாறாத அன்பை.”
^ அல்லது, “கடினமான.” நே.மொ., “பாரமான.”
^ வே.வா., “அவளுக்குள் கரிசனை பொங்கியது.”
^ நே.மொ., “பயந்தார்கள்.”