1 ராஜாக்கள் 5:1-18
5 தாவீதுக்குப் பிறகு அவருடைய மகன் சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற விஷயத்தை தீருவின்+ ராஜாவான ஈராம் கேள்விப்பட்டார். தாவீதின் வாழ்நாள் முழுவதும் ஈராம் அவருக்கு ஒரு நல்ல நண்பராக இருந்ததால்*+ சாலொமோனைச் சந்திக்க தன்னுடைய ஊழியர்களை அனுப்பினார்.
2 சாலொமோனும் ஈராமுக்குச் செய்தி அனுப்பினார்.+
3 “யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தை என் அப்பாவால் கட்ட முடியவில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஏனென்றால், சுற்றியிருந்த எதிரிகள் எல்லாரையும் யெகோவாவின் துணையோடு வீழ்த்தும்வரை அவர் போர் செய்துகொண்டிருந்தார்.+
4 ஆனால், இப்போது எதிரிகள் யாருடைய தொல்லையும் இல்லாமல் யெகோவா தேவன் என்னை நிம்மதியாக வைத்திருக்கிறார்.+ எனக்கு யாருடைய எதிர்ப்பும் இல்லை, எந்தத் தொந்தரவும் இல்லை.+
5 யெகோவா தேவன் என் அப்பா தாவீதிடம், ‘உனக்குப் பின்பு உன் மகனைச் சிம்மாசனத்தில் ராஜாவாக உட்கார வைப்பேன். அவன் என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்று வாக்குக் கொடுத்திருந்தார். அவர் சொன்னபடியே என்னுடைய கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட விரும்புகிறேன்.+
6 லீபனோனில் உள்ள தேவதாரு மரங்களை+ எனக்காக வெட்டச் சொல்லி உங்கள் ஆட்களிடம் கட்டளையிடுங்கள். உங்களுடைய ஆட்களோடு சேர்ந்து என்னுடைய ஆட்களும் வேலை செய்வார்கள். நீங்கள் கேட்கிற கூலியை உங்களுடைய ஆட்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். சீதோனியர்களைப் போல் நன்றாக மரம் வெட்டத் தெரிந்தவர்கள் எங்களிடம் ஒருவர்கூட இல்லையென்பது உங்களுக்கே தெரியும்”+ என்று செய்தி அனுப்பினார்.
7 இதைக் கேட்டு ஈராம் மிகவும் சந்தோஷப்பட்டு, “இந்த ஏராளமான மக்களை ஆட்சி செய்ய தாவீதுக்கு ஞானமுள்ள மகனைக் கொடுத்ததற்காக யெகோவாவைப் புகழ்கிறேன்”+ என்று சொன்னார்.
8 பின்பு அவர் சாலொமோனுக்குச் செய்தி அனுப்பினார். அதில், “உங்களுடைய செய்தி கிடைத்தது. உங்கள் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்கிறேன், தேவதாரு மரங்களையும் ஆபால் மரங்களையும்+ வெட்டி அனுப்புகிறேன்.
9 அவற்றை என்னுடைய ஆட்கள் லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். அவற்றை ஒன்றாகக் கட்டி நீங்கள் சொல்கிற இடத்துக்குக் கடல்வழியாக அனுப்பி வைக்கிறேன். அவை வந்துசேர்ந்ததும் என்னுடைய ஆட்கள் அவற்றை அவிழ்த்துக் கொடுப்பார்கள். அதன் பின்பு, நீங்கள் எடுத்துக்கொண்டு போகலாம். இதற்காக, என் வீட்டாருக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுங்கள்”+ என்று சொன்னார்.
10 சாலொமோன் கேட்டபடியே தேவதாரு மரங்களையும் ஆபால் மரங்களையும் வேண்டிய அளவு ஈராம் அனுப்பி வைத்தார்.
11 ஈராமின் வீட்டாருக்காக 20,000 கோர் அளவு* கோதுமையையும் 20 கோர் அளவு உயர்தர ஒலிவ எண்ணெயையும்* ஒவ்வொரு வருஷமும் சாலொமோன் அனுப்பி வைத்தார்.+
12 வாக்குக் கொடுத்தபடியே, சாலொமோனுக்கு யெகோவா ஞானத்தைத் தந்தார்.+ சாலொமோனின் தேசத்துக்கும் ஈராமின் தேசத்துக்கும் இடையே நல்லுறவு இருந்தது. அவர்கள் இரண்டு பேரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.
13 சாலொமோன் ராஜா இஸ்ரவேல் முழுவதிலும் இருந்து 30,000 பேரைத் தேர்ந்தெடுத்து தனக்கு அடிமை வேலை செய்யும்படி கட்டளையிட்டார்.+
14 அவர்களைப் பத்தாயிரம் பத்தாயிரம் பேராக ஒவ்வொரு மாதமும் லீபனோனுக்கு அனுப்பினார். அவர்கள் ஒரு மாதம் லீபனோனில் வேலை செய்தார்கள், இரண்டு மாதங்கள் தங்களுடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு அதோனீராம் அதிகாரியாக இருந்தார்.+
15 சுமை சுமக்க 70,000 பேரையும் மலைகளில் கற்களை வெட்டிச் செதுக்க 80,000 பேரையும் சாலொமோன் வேலைக்கு வைத்தார்.+
16 அவர்களை மேற்பார்வை செய்ய 3,300 நிர்வாகிகளை நியமித்தார்.+
17 ராஜாவின் கட்டளைப்படி, விலைமதிப்புள்ள பெரிய கற்களை+ அவர்கள் வெட்டியெடுத்தார்கள். ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடுவதற்காக+ அவற்றைச் செதுக்கினார்கள்.+
18 சாலொமோனின் ஆட்களும் ஈராமின் ஆட்களும் கேபாலைச் சேர்ந்தவர்களும்+ கற்களை வெட்டினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான மரங்களையும் கற்களையும் தயார்படுத்தினார்கள்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “அவருக்கு அன்பு காட்டியதால்.”
^ ஒரு கோர் என்பது 220 லிட்டருக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “இடித்துப் பிழிந்த எண்ணெயையும்.”