2 சாமுவேல் 19:1-43

19  அப்சலோமை நினைத்து ராஜா அழுது புலம்பிக்கொண்டிருப்பதாக*+ யோவாபிடம் தெரிவிக்கப்பட்டது.  மகன் இறந்ததால் துக்கம் தாங்காமல் ராஜா அழுதுகொண்டிருக்கிறார் என்பதை மக்கள் கேள்விப்பட்டார்கள். அதனால், வெற்றி கிடைத்த அந்த நாள் எல்லாருக்கும் துக்க நாளாக மாறியது.  போரில் தோற்றுப்போனவர்கள் அவமானப்பட்டுத் திரும்பி வருவதுபோல+ மக்கள் சத்தமில்லாமல் நகரத்துக்குத் திரும்பி வந்தார்கள்.  ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, “அப்சலோமே, என் மகனே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அழுதுகொண்டிருந்தார்.+  பின்பு ராஜா தங்கியிருந்த வீட்டுக்கு யோவாப் போய், “இன்றைக்கு உங்களுடைய ஊழியர்கள்தான் உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள்; உங்கள் மகன்கள்,+ மகள்கள்,+ மனைவிகள், மறுமனைவிகள்+ எல்லாருடைய உயிரையும் பாதுகாத்தார்கள். ஆனால், உங்கள் ஊழியர்கள் எல்லாரையும் நீங்கள் அவமானப்படுத்திவிட்டீர்கள்.  உங்களை வெறுக்கிறவர்கள்மேல் பாசத்தைக் காட்டுகிறீர்கள், ஆனால் உங்கள்மேல் உயிரையே வைத்திருப்பவர்களை வெறுக்கிறீர்கள். படைத் தலைவர்களும் ஊழியர்களும் உங்களுக்கு முக்கியம் இல்லை என்பதை இன்றைக்கு நன்றாகக் காட்டிவிட்டீர்கள். அப்சலோம் மட்டும் உயிரோடு இருந்து, நாங்கள் எல்லாரும் செத்துப்போயிருந்தால் உங்களுக்கு நன்றாக இருந்திருக்கும், இல்லையா?  இப்போதே எழுந்து போய் உங்களுடைய ஊழியர்களை உற்சாகப்படுத்துங்கள். யெகோவாமீது ஆணையாகச் சொல்கிறேன், நீங்கள் இப்போது போகாவிட்டால் இன்று ராத்திரி ஒருவன்கூட உங்களோடு இருக்க மாட்டான். சிறு வயதிலிருந்து உங்களுக்கு வந்த கஷ்டத்தைவிட இது படுபயங்கரமாக இருக்கும்” என்று சொன்னார்.  அதனால், ராஜா எழுந்து போய் நகரவாசலில் உட்கார்ந்துகொண்டார்; நகரவாசலில் ராஜா உட்கார்ந்திருக்கிறார் என்ற செய்தி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, மக்கள் எல்லாரும் ராஜாவின் முன்னால் வந்தார்கள். இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்குத் தப்பித்து ஓடினார்கள்.+  இஸ்ரவேலிலுள்ள எல்லா கோத்திரத்தாரும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள், “நம்முடைய எதிரிகளிடமிருந்து தாவீது ராஜா நம்மை விடுதலை செய்தார்,+ பெலிஸ்தியர்களின் கையிலிருந்து நம்மைக் காப்பாற்றினார். ஆனால், அப்சலோமால் அவர் இப்போது தேசத்தைவிட்டே போய்விட்டார்.+ 10  நாம் அப்சலோமை ராஜாவாக அபிஷேகம் செய்தோம்.+ அவரும் போரில் செத்துப்போய்விட்டார்.+ இப்போது ராஜாவைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வராமல் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?” என்று பேசிக்கொண்டார்கள். 11  குருமார்களான சாதோக்கிற்கும்+ அபியத்தாருக்கும்+ தாவீது ராஜா தகவல் அனுப்பினார். அவர்களிடம், “நீங்கள் யூதாவிலுள்ள பெரியோர்களிடம்*+ போய், ‘அரண்மனைக்குத் திரும்பிவரச் சொல்லி இஸ்ரவேலிலுள்ள எல்லா கோத்திரத்தாரும் ராஜாவுக்குச் செய்தி அனுப்பிவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, நீங்கள் மட்டும் ஏன் ராஜாவைத் திரும்பக் கூப்பிடத் தயங்குகிறீர்கள்? 12  நீங்கள் என் சகோதரர்கள், என் இரத்த சொந்தம்.* எல்லாரும் கூப்பிட்ட பின்பு கடைசியாகத்தான் நீங்கள் ராஜாவைக் கூப்பிடப்போகிறீர்களா?’ என்று கேளுங்கள். 13  அதோடு அமாசாவிடம்+ போய், ‘நீ என் இரத்த சொந்தம்தானே?* இன்றுமுதல் யோவாபுக்குப் பதிலாக நீதான் படைத் தளபதி.+ அப்படி உன்னை நியமிக்காவிட்டால் கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்’ என்று ராஜா சொன்னதாகச் சொல்லுங்கள்” என்றார். 14  ராஜாவின் பேச்சு யூதா ஆண்களுடைய இதயத்தைத் தொட்டது; அதனால், அவர்கள் எல்லாரும் ஒருமனதாகத் தீர்மானித்து, “நீங்களும் உங்களுடைய ஊழியர்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள்” என்று ராஜாவுக்குச் சொல்லி அனுப்பினார்கள். 15  அதனால், ராஜா புறப்பட்டு யோர்தானுக்குப் போனார்; அவரைச் சந்திக்கவும் அவர் யோர்தானைக் கடக்கும்போது அவருக்குத் துணையாகப் போகவும் யூதா கோத்திரத்தார் கில்காலுக்கு+ வந்தார்கள். 16  பகூரிமில் குடியிருந்த பென்யமீன் கோத்திரத்தானும் கேராவின் மகனுமாகிய சீமேயி,+ தாவீது ராஜாவைச் சந்திக்க அவர்களோடு அவசர அவசரமாக வந்தான்; 17  அவனோடு, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆண்கள் வந்தார்கள். சவுலின் வேலைக்காரனாகிய சீபாவும்+ தன்னுடைய 15 மகன்களையும் 20 வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு வேக வேகமாக வந்தான்; ராஜா வருவதற்கு முன்பே யோர்தானுக்கு வந்துசேர்ந்தான். 18  யோர்தானைக் கடக்க ராஜாவின் வீட்டாருக்கு உதவி செய்வதற்கும், ராஜா விரும்பியதையெல்லாம் செய்வதற்கும் அவன்* ஆற்றுத்துறையை* கடந்து இக்கரைக்கு வந்தான். ராஜா யோர்தானைக் கடக்கப்போகும் சமயத்தில், கேராவின் மகன் சீமேயி வந்து அவர் காலில் விழுந்தான். 19  அவன் ராஜாவிடம், “ராஜாவே, என் எஜமானே, என்னை மன்னித்துவிடுங்கள், நீங்கள் எருசலேமிலிருந்து போனபோது அடியேன் செய்த தவறை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள்.+ ராஜாவே, நான் செய்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். 20  நான் பாவம் செய்துவிட்டேன். அது அடியேனுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், இன்று யோசேப்பின் வம்சத்தார் எல்லாருக்கும் முன்பாக முதல் ஆளாக என் எஜமானாகிய ராஜாவைச் சந்திக்க வந்தேன்” என்று சொன்னான். 21  உடனே செருயாவின்+ மகன் அபிசாய்,+ “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரையே சபித்தானே, இவனைக் கொல்ல வேண்டாமா?”+ என்று கேட்டார். 22  அதற்கு தாவீது, “செருயாவின் மகன்களே,+ நீங்கள் ஏன் அநாவசியமாகத் தலையிடுகிறீர்கள்? எனக்கு எதிராக எதையும் செய்யாதீர்கள்! நான் இன்று மறுபடியும் இஸ்ரவேலின் ராஜாவாக ஆகியிருக்கிறேன், இன்று இஸ்ரவேலில் யாராவது கொல்லப்படலாமா?” என்று கேட்டார். 23  பின்பு சீமேயியைப் பார்த்து, “உன்னைக் கொல்ல மாட்டேன்” என்று உறுதிமொழி தந்தார்.+ 24  சவுலின் பேரன் மேவிபோசேத்தும்+ ராஜாவை வரவேற்க வந்தார். ராஜா எருசலேமிலிருந்து போன நாள்முதல் அவர் பத்திரமாகத் திரும்பி வந்த நாள்வரை மேவிபோசேத் தன்னுடைய பாதங்களைக் கழுவவுமில்லை, தாடிமீசையை வெட்டவுமில்லை, உடைகளைத் துவைக்கவுமில்லை. 25  ராஜாவைப் பார்க்க அவர் எருசலேமுக்கு* வந்தபோது ராஜா அவரிடம், “மேவிபோசேத், நீ ஏன் என்னுடன் வரவில்லை?” என்று கேட்டார். 26  அதற்கு அவர், “ராஜாவே, என் எஜமானே, என் வேலைக்காரன்+ சதி செய்துவிட்டான். என் கால் ஊனமாக இருப்பதால்,+ ‘கழுதைமேல் சேணம்* வைத்துக் கொடு, நானும் ராஜாவுடன் போகிறேன்’ என்று அவனிடம் சொன்னேன். 27  ஆனால் ராஜாவே, என் எஜமானே, அவன் உங்களிடம் வந்து என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிவிட்டான்.+ ஆனால், என் எஜமானாகிய நீங்கள் உண்மைக் கடவுளின் தூதரைப் போன்றவர். அதனால், உங்களுக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதையே செய்யுங்கள். 28  என் எஜமானே, ராஜாவே, நீங்கள் நினைத்திருந்தால் என்னுடைய அப்பாவின் வம்சத்தையே அடியோடு அழித்திருக்கலாம். இருந்தாலும், உங்களுடைய மேஜையில் உங்களோடு சாப்பிடும் பாக்கியத்தை அடியேனுக்குத் தந்தீர்கள்.+ ராஜாவாகிய உங்களிடம் இதற்குமேல் எதையாவது மன்றாடிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று சொன்னார். 29  ராஜா அவரிடம், “இந்த விஷயத்தைப் பற்றி இதற்குமேல் நீ ஒன்றும் பேச வேண்டாம். நீயும் சீபாவும் நிலத்தைச் சரிசமமாகப் பங்குபோட்டுக்கொள்ளுங்கள்.+ இதுதான் என் முடிவு” என்று சொன்னார். 30  அதற்கு மேவிபோசேத், “ராஜாவே, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும். என் எஜமான் சமாதானத்தோடு திரும்பி வந்ததே எனக்குப் போதும்” என்று சொன்னார். 31  பின்பு, யோர்தான் ஆறுவரை ராஜா கூடவே போவதற்காக, ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலா+ யோர்தானுக்கு வந்தார். 32  பர்சிலா வயது முதிர்ந்தவர்; அவருக்கு 80 வயது. அவர் பெரிய பணக்காரராக இருந்ததால், மக்னாயீமில் ராஜா தங்கியிருந்த சமயத்தில் அவருக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்திருந்தார்.+ 33  அதனால் ராஜா அவரிடம், “நீங்களும் யோர்தானைக் கடந்து என்னுடன் வந்துவிடுங்கள். எருசலேமில் நீங்கள் எப்போதும் என்னோடு உணவு சாப்பிடுவீர்கள்”+ என்று சொன்னார். 34  அதற்கு பர்சிலா, “ராஜாவே, எருசலேமுக்கு வந்து நான் என்ன செய்யப்போகிறேன்? இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருக்கப்போகிறேனோ தெரியவில்லை. 35  இப்போதே எனக்கு 80 வயதாகிவிட்டது.+ இனி வாழ்க்கையில் எனக்கு என்ன இருக்கிறது? என்ன சாப்பிட்டாலும், குடித்தாலும் ருசி தெரியவா போகிறது? பாடகர் பாடகிகளின் பாட்டு காதில் கேட்கவா போகிறது?+ எஜமானே, நான் வந்து உங்களுக்குப் பாரமாக இருக்க வேண்டுமா? 36  யோர்தான்வரை உங்களோடு வந்ததே அடியேனுக்குப் போதும். இதற்குமேல் நீங்கள் எதையும் எனக்குத் திருப்பிச் செய்ய வேண்டாம். 37  ஊருக்குத் திரும்பிப் போக அடியேனுக்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள். என் சொந்த ஊருக்கே போகிறேன், என்னுடைய அப்பா அம்மாவின் கல்லறை இருக்கிற இடத்தில்தான் சாக ஆசைப்படுகிறேன்.+ இதோ, உங்கள் ஊழியன் கிம்காம் இருக்கிறான்.+ அவனை உங்களோடு கூட்டிக்கொண்டு போங்கள். உங்களுக்கு எது நல்லதாகத் தோன்றுகிறதோ அதையே அவனுக்குச் செய்யுங்கள்” என்று சொன்னார். 38  அதற்கு ராஜா, “கிம்காம் என்னோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனைப் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னார். 39  தாவீதுடன் இருந்தவர்கள் எல்லாரும் யோர்தானைக் கடக்க ஆரம்பித்தார்கள். ஆற்றைக் கடப்பதற்கு முன்பு பர்சிலாவுக்கு ராஜா முத்தம் கொடுத்து+ அவரை ஆசீர்வதித்தார். பின்பு, பர்சிலா வீடு திரும்பினார். 40  ராஜாவோ யோர்தானைக் கடந்து கில்காலுக்குப் போனார்.+ கிம்காமும் அவர்கூடவே போனான். ராஜா யோர்தானைக் கடந்தபோது யூதா கோத்திரத்தார் எல்லாரும், இஸ்ரவேல் மக்களில் பாதிப் பேரும் அவருடன் போனார்கள்.+ 41  பின்பு, இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் ராஜாவிடம் வந்து, “எங்கள் சகோதரர்களான யூதா கோத்திரத்தார் ஏன் உங்களை இப்படித் திருட்டுத்தனமாகக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்? உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் உங்களுடைய எல்லா ஊழியர்களையும் ஏன் இப்படி யோர்தானைக் கடக்கச் செய்திருக்கிறார்கள்?”+ என்று கேட்டார்கள். 42  அதற்கு யூதாவைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரும், “ராஜா எங்களுக்குச் சொந்தக்காரர்.+ இப்போது நீங்கள் ஏன் அநாவசியமாகக் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் என்ன ராஜாவின் பணத்தில் சாப்பிட்டோமா? அல்லது எங்களுக்கு ஏதாவது அன்பளிப்புதான் கிடைத்துவிட்டதா?” என்று இஸ்ரவேல் ஆண்களிடம் கேட்டார்கள். 43  அதற்கு இஸ்ரவேல் ஆண்கள், “ராஜ்யத்தில் பத்துப் பாகம் எங்களுடையது. அதனால் தாவீதிடம் உங்களைவிட எங்களுக்குத்தான் உரிமை அதிகம். அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் எங்களை ஒதுக்கிவிட்டீர்கள்? ராஜாவைக் கூட்டிக்கொண்டுவர நாங்கள்தானே முதலில் போயிருக்க வேண்டும்?” என்று கேட்டார்கள். ஆனால், யூதா ஆண்களிடம் அவர்களால் பேசி ஜெயிக்க முடியவில்லை.*

அடிக்குறிப்புகள்

நே.மொ., “துக்கம் அனுசரிப்பதாக.”
வே.வா., “மூப்பர்களிடம்.”
நே.மொ., “எலும்பும் சதையுமாக இருக்கிறீர்கள்.”
நே.மொ., “எலும்பும் சதையுமாக இருக்கிறாய்தானே?”
அல்லது, “அவர்கள்.”
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதி.
அல்லது, “எருசலேமிலிருந்து.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
வே.வா., “ஆண்களின் பேச்சு அவர்களுடைய பேச்சைவிட கடுமையாக இருந்தது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா