தீமோத்தேயுவுக்கு இரண்டாம் கடிதம் 2:1-26

2  என் பிள்ளையே,+ கிறிஸ்து இயேசுவின் அளவற்ற கருணை மூலம் நீ வலிமை பெற்றுக்கொண்டே இரு.  என்னிடமிருந்து நீ கற்றுக்கொண்டதும் பலர் சாட்சி கொடுத்ததுமான விஷயங்களை+ உண்மையுள்ள ஆட்களிடம் சொல்; அப்போது, மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க அவர்கள் போதிய தகுதி பெறுவார்கள்.  கிறிஸ்து இயேசுவின் சிறந்த படைவீரனாகக்+ கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்.+  படைவீரனாகச் சேவை செய்கிற எந்த மனிதனும் மற்ற தொழில்களில்* ஈடுபட மாட்டான்;* தன்னைப் படைவீரனாகச் சேர்த்துக்கொண்டவரின் பிரியத்தைச் சம்பாதிக்கவே முயற்சி செய்வான்.  போட்டி விளையாட்டுகளில் பங்குகொள்கிற ஒருவன் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் அவனுக்குக் கிரீடம் கிடைக்காது.+  கடினமாக உழைக்கிற விவசாயிதான் விளைச்சலின் பலனை முதலில் அனுபவிக்க வேண்டும்.  நான் சொல்கிற விஷயங்களை எப்போதும் யோசித்துக்கொண்டிரு; எல்லா விஷயங்களையும் புரிந்துகொள்கிற* திறமையை நம் எஜமான் உனக்குக் கொடுப்பார்.  தாவீதின் சந்ததியில்+ வந்த இயேசு கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டார்+ என்பதை ஞாபகத்தில் வை; இதுதான் நான் பிரசங்கிக்கும் நல்ல செய்தி.+  இதற்காகத்தான் நான் ஒரு குற்றவாளியைப் போல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு,+ கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். ஆனாலும், கடவுளுடைய வார்த்தையை அடைத்து வைக்க முடியாது.+ 10  கிறிஸ்து இயேசு மூலம் கிடைக்கிற மீட்பையும் முடிவில்லாத மகிமையையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லா கஷ்டங்களையும் அவர்களுக்காகச் சகித்துவருகிறேன்.+ 11  இது நம்பகமான விஷயம்: நாம் அவரோடு இறந்தால், நிச்சயம் அவரோடு வாழ்வோம்;+ 12  நாம் கஷ்டங்களைச் சகித்துவந்தால், ராஜாக்களாக அவரோடு ஆட்சியும் செய்வோம்;+ நாம் அவரைத் தெரியாது என்று சொன்னால், அவரும் நம்மைத் தெரியாது என்று சொல்லிவிடுவார்.+ 13  நாம் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் அவர் உண்மையுள்ளவராகவே இருப்பார்; ஏனென்றால், அவர் தன்னுடைய இயல்புக்கு மாறாகச் செயல்பட மாட்டார். 14  இதையெல்லாம் அவர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இரு; வார்த்தைகளுக்காகச் சண்டை போட வேண்டாம் என்று கடவுளுக்கு முன்னால் அவர்களுக்கு அறிவுரை சொல்;* அப்படிச் சண்டை போடுவது எதற்கும் உதவாது, கேட்கிறவர்களுடைய விசுவாசத்தைக் குலைத்துதான் போடும். 15  எதற்காகவும் வெட்கப்படாத வேலையாளாக, சத்திய வார்த்தையைச் சரியாய்ப் பயன்படுத்துகிறவனாக, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக அவருக்கு முன்னால் நிற்பதற்கு உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்.+ 16  ஆனால், பரிசுத்தமான விஷயங்களுக்கு விரோதமான வீண் பேச்சுகளை அடியோடு தவிர்த்து விடு;+ ஏனென்றால், கடவுள்பக்தியற்ற செயல்களை அதிகமதிகமாகச் செய்வதற்குத்தான் அவை வழிநடத்தும்.* 17  அப்படிப் பேசுகிறவர்களுடைய வார்த்தைகள் சதை அழுகல் நோயைப் போல் பரவும். இமெனேயுவும் பிலேத்துவும் அப்படிப்பட்டவர்கள்தான்.+ 18  இந்த ஆட்கள், உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்துவிட்டது என்று சொல்லி சத்தியத்தைவிட்டு விலகிப்போயிருக்கிறார்கள்;+ அதோடு, சிலருடைய விசுவாசத்தைக் குலைத்தும் வருகிறார்கள். 19  அப்படியிருந்தும், கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம் நிலைத்து நிற்கிறது. அதில், “தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா* அறிந்திருக்கிறார்”+ என்றும், “யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள்+ அநீதியைக் கைவிட வேண்டும்” என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. 20  ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மட்டுமல்ல, மரப் பாத்திரங்களும் மண் பாத்திரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில கண்ணியமான காரியத்துக்காகவும், மற்றவை கண்ணியமில்லாத காரியத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. 21  கண்ணியமில்லாத காரியத்துக்காகப் பயன்படுத்தப்படுகிற பாத்திரங்களைவிட்டு ஒருவன் விலகியிருந்தால், கண்ணியமான காரியத்துக்குப் பயன்படுத்தப்படுகிற பாத்திரமாக* இருப்பான்; பரிசுத்தமாக்கப்பட்டவனாக, தன் எஜமானுக்குப் பிரயோஜனமானவனாக, எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்யத் தயாராக்கப்பட்டவனாக இருப்பான். 22  அதனால், இளமைப் பருவத்தில் வருகிற ஆசைகளைவிட்டு நீ விலகி ஓடு; சுத்த இதயத்தோடு நம் எஜமான்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களுடன்* சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடு. 23  அதோடு முட்டாள்தனமான, அர்த்தமில்லாத விவாதங்களை ஒதுக்கித்தள்ளு;+ அவை சண்டைகளைத்தான் மூட்டிவிடும். 24  நம் எஜமானின் ஊழியன் சண்டைபோடக் கூடாது; அதற்குப் பதிலாக, எல்லாரிடமும் மென்மையாக* நடந்துகொள்கிறவனாகவும்,+ கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவனாகவும், தீமையைப் பொறுத்துக்கொள்கிறவனாகவும்,+ 25  கலகம் செய்கிறவர்களுக்குச் சாந்தத்தோடு அறிவுரை சொல்கிறவனாகவும் இருக்க வேண்டும்.+ ஏனென்றால், அவர்கள் மனம் திருந்தி* சத்தியத்தைத் திருத்தமாகத் தெரிந்துகொள்வதற்குக்+ கடவுள் ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம். 26  அப்போது, பிசாசுடைய விருப்பத்தின்படி நடக்க அவனால் உயிரோடு பிடித்து வைக்கப்பட்டிருக்கிற அவர்கள்,+ புத்தி தெளிந்து அவனுடைய கண்ணியிலிருந்து விடுபடலாம்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “அன்றாட வேலைகளில்.”
நே.மொ., “சிக்கிக்கொள்ள மாட்டான்.”
வே.வா., “பகுத்தறிகிற.”
நே.மொ., “முழுமையாகச் சாட்சி கொடு.”
வே.வா., “அவர்கள் வழிநடத்துவார்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “கருவியாக.”
நே.மொ., “எஜமானைக் கூப்பிடுகிறவர்களுடன்.”
வே.வா., “சாதுரியமாக.”
வே.வா., “மனம் மாறி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா