2 நாளாகமம் 35:1-27
35 எருசலேமில் யெகோவாவுக்கு பஸ்கா+ பண்டிகையை யோசியா கொண்டாடினார். முதல் மாதம் 14-ஆம் நாளில்+ அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினார்கள்.+
2 யெகோவாவின் ஆலயத்தில் செய்ய வேண்டிய வேலைகளைக் குருமார்களுக்கு நியமித்து, அதையெல்லாம் நல்லபடியாகச் செய்யச் சொல்லி ராஜா ஊக்கப்படுத்தினார்.+
3 இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் திருச்சட்டத்தைச் சொல்லித்தரும் பொறுப்பு லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.+ யெகோவாவின் வேலைக்காக அவர்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள். யோசியா ராஜா லேவியர்களைப் பார்த்து, “இஸ்ரவேலின் ராஜாவான தாவீதின் மகன் சாலொமோன் கட்டிய ஆலயத்தில்+ பரிசுத்த பெட்டியை வையுங்கள். இனிமேல் நீங்கள் அதைத் தோளில் சுமக்க வேண்டாம்.+ உங்களுடைய கடவுளான யெகோவாவுக்கும் அவருடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் இப்போது சேவை செய்யுங்கள்.
4 உங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின்படியும் உங்களுடைய பிரிவின்படியும் சேவை செய்யத் தயாராக இருங்கள். இஸ்ரவேலின் ராஜா தாவீதும் அவருடைய மகன் சாலொமோனும் எழுதி வைத்திருக்கும் முறையைப் பின்பற்றுங்கள்.+
5 பரிசுத்த இடத்துக்குப் போய், அவரவருடைய பிரிவின்படி நில்லுங்கள். அப்போதுதான் மக்களுக்குச் சேவை செய்து, உங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தில் இருக்கிற லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்ற முடியும்.
6 பஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டிய+ பின்பு உங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு, மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையை உங்கள் சகோதரர்கள் நிறைவேற்றுவதற்குத் தேவையானவற்றைத் தயார்படுத்துங்கள்” என்று சொன்னார்.
7 அங்கே வந்திருந்த மக்கள் எல்லாரும் பஸ்கா பலி செலுத்துவதற்காக அவர்களுக்குச் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் கடாக் குட்டிகளையும் யோசியா நன்கொடையாகக் கொடுத்தார். தனக்குச் சொந்தமானவற்றில் 30,000 ஆட்டுக்குட்டிகளையும் 3,000 காளைகளையும் கொடுத்தார்.+
8 அவருடைய அதிகாரிகளும்கூட மக்களுக்காகவும் குருமார்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் தாங்களாகவே விருப்பப்பட்டு நன்கொடை கொடுத்தார்கள். உண்மைக் கடவுளின் ஆலய அதிகாரிகளான இல்க்கியா,+ சகரியா, யெகியேல் ஆகியோர் 2,600 பஸ்கா ஆட்டுக்குட்டிகளையும் 300 காளைகளையும் குருமார்களிடம் கொடுத்தார்கள்.
9 லேவியர்களின் தலைவர்களான அஷபியா, எயியேல், யோசபத் ஆகியோருடன் சேர்ந்து கொனனியாவும், அவருடைய சகோதரர்களான செமாயா, நெதனெயேல் ஆகியோரும் 5,000 பஸ்கா ஆட்டுக்குட்டிகளையும் 500 காளைகளையும் நன்கொடையாகக் கொடுத்தார்கள்.
10 பண்டிகைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ராஜா கட்டளையிட்டபடி குருமார்கள் அவரவருடைய இடங்களில் நின்றார்கள்; லேவியர்கள் அவரவருடைய பிரிவுகளின்படி நின்றார்கள்.+
11 பின்பு, பஸ்கா ஆட்டுக்குட்டிகளை அவர்கள் வெட்டினார்கள்.+ லேவியர்களிடமிருந்து இரத்தத்தை வாங்கி குருமார்கள் தெளித்தார்கள்,+ அந்தச் சமயத்தில் ஆடுகளின் தோலை லேவியர்கள் உரித்துக்கொண்டிருந்தார்கள்.+
12 அவரவருடைய தந்தைவழிக் குடும்பத்தின்படி நின்றுகொண்டிருந்த மக்களுக்குத் தகன பலிகளைப் பிரித்துக் கொடுப்பதற்காக அவற்றைத் தயார் செய்தார்கள். மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடி யெகோவாவுக்குப் பலி செலுத்துவதற்காக அவற்றைத் தயார் செய்தார்கள். காளைகளையும் இதேபோல் தயார் செய்தார்கள்.
13 வழக்கப்படி, பஸ்கா ஆட்டுக்குட்டிகளை நெருப்பில் சமைத்தார்கள்.*+ பரிசுத்த பலிகளைப் பானைகளிலும் அண்டாக்களிலும் சட்டிகளிலும் சமைத்தார்கள். பின்பு, உடனடியாக அவற்றை மக்கள் எல்லாரிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
14 தங்களுக்காகவும் குருமார்களுக்காகவும் பஸ்கா பலியை லேவியர்கள் தயார் செய்தார்கள். ஆரோனின் வம்சத்தில் வந்த குருமார்கள் தகன பலிகளையும் கொழுப்பையும் ராத்திரிவரை செலுத்திக்கொண்டிருந்ததால், லேவியர்கள் தங்களுக்காகவும் ஆரோனின் வம்சத்தில் வந்த குருமார்களுக்காகவும் பஸ்கா பலியைத் தயார் செய்தார்கள்.
15 தாவீதும்+ ஆசாப்பும்+ ஏமானும் ராஜாவின் தரிசனக்காரரான எதித்தூனும் கொடுத்த கட்டளைப்படி,+ ஆசாப்பின்+ வம்சத்தில் வந்த பாடகர்கள் தங்களுடைய இடத்தில் நின்றார்கள். வாயிற்காவலர்கள் வெவ்வேறு வாசல்களில் நின்றார்கள்.+ தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அவர்களுடைய சகோதரர்களான லேவியர்கள் செய்திருந்தார்கள். அதனால், அவர்கள் தங்களுடைய இடத்தைவிட்டுப் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
16 யோசியா ராஜாவின் கட்டளைப்படி,+ யெகோவாவுக்குப் பஸ்கா+ பண்டிகையைக் கொண்டாடுவதற்கும், யெகோவாவின் பலிபீடத்தில் தகன பலிகளைக் கொடுப்பதற்கும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
17 அங்கே வந்திருந்த இஸ்ரவேலர்கள் பஸ்கா பண்டிகையையும் புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையையும் ஏழு நாட்களுக்குக் கொண்டாடினார்கள்.+
18 சாமுவேல் தீர்க்கதரிசி காலத்திலிருந்து அதுவரை இஸ்ரவேலில் இந்தளவு சிறப்பாக பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டதே இல்லை.+ யோசியா, குருமார்கள், லேவியர்கள், பண்டிகைக்காக வந்திருந்த யூதா மக்கள், இஸ்ரவேல் மக்கள், எருசலேம் மக்கள் ஆகியோர் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடியதைப் போல் வேறெந்த இஸ்ரவேல் ராஜாவும் சிறப்பாகக் கொண்டாடவில்லை.
19 யோசியா ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில் இந்த பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது.
20 கடவுளுடைய ஆலயத்தை யோசியா ராஜா நல்ல நிலைக்குக் கொண்டுவந்த பின்பு, யூப்ரடிஸ்* ஆற்றோரத்தில் இருந்த கர்கேமிஸ் என்ற இடத்துக்கு எகிப்தின் ராஜாவான நேகோ+ போர் செய்ய வந்தான். அப்போது, யோசியா அவனை எதிர்த்துப் போர் செய்யப் போனார்.+
21 அதனால் நேகோ தன்னுடைய தூதுவர்களை அவரிடம் அனுப்பி, “யூதா ராஜாவே, நீங்கள் ஏன் என்னோடு சண்டை போட வருகிறீர்கள்? நான் உங்களை எதிர்த்து வரவில்லை. வேறொரு தேசத்தோடு சண்டை போடத்தான் வந்தேன். அந்தத் தேசத்தை உடனடியாகத் தாக்கச் சொல்லி கடவுள் என்னை அனுப்பினார். கடவுள் எனக்குத் துணையாக இருக்கிறார். அதனால் திரும்பிப் போவதுதான் உங்களுக்கு நல்லது. இல்லையென்றால், அவர் உங்களை அழித்துவிடுவார்” என்று சொன்னான்.
22 ஆனால், யோசியா அங்கிருந்து போகவில்லை. நேகோவுடன் போர் செய்வதற்காக மாறுவேஷத்தில் போனார்.+ நேகோ மூலம் கடவுள் சொன்ன செய்தியைக் காதில் வாங்காமல், அவனுடன் போர் செய்வதற்காக மெகிதோ சமவெளிக்குப் போனார்.+
23 வில்வீரர்கள் எறிந்த அம்பு யோசியா ராஜாமீது பாய்ந்தது. அப்போது அவர் தன்னுடைய ஊழியர்களிடம், “எனக்குப் பயங்கரமாகக் காயம்பட்டுவிட்டது, உடனே என்னை இங்கிருந்து கொண்டுபோங்கள்” என்று சொன்னார்.
24 அதனால், அந்த ரதத்திலிருந்து வேறொரு போர் ரதத்தில் அவரை ஏற்றி எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால், அவர் இறந்துபோனார். அப்போது, அவருடைய முன்னோர்களின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தார்கள்.+ யூதா, எருசலேம் மக்கள் எல்லாரும் அவருக்காகத் துக்கம் அனுசரித்தார்கள்.
25 யோசியாவுக்காக எரேமியா+ புலம்பல் பாடல் பாடினார். பாடகர்கள், பாடகிகள் எல்லாரும்+ புலம்பல் பாடல் பாடும்போது இன்றுவரை யோசியாவைப் பற்றிப் பாடுகிறார்கள். இஸ்ரவேலில் அந்தப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. புலம்பல் பாடல்கள் எழுதப்பட்ட புத்தகத்தில் இந்தப் பாடல்கள் இருக்கின்றன.
26 யோசியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களும், யெகோவாவின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து மாறாத அன்புடன் அவர் செய்த செயல்களும்,
27 ஆரம்பம்முதல் முடிவுவரை செய்த எல்லா செயல்களும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.+